உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை.
உக்ரைன் மீதான போரில் ரஷியா என்ன செய்யப்போகிறது என ஊகிக்க முடியாத வகையில் இப்போது நாளும் திருப்பங்கள் நேரிட்டு வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாதநிலையில், கிழக்கு உக்ரைன் மீது ரஷிய படைகள் கவனம் செலுத்தி வந்தன. டான்பாஸ் பிராந்தியத்தில் பல நகரங்களையும், கிராமங்களையும் ரஷியப்படைகள் வசப்படுத்தின.
இதற்கிடையே உக்ரைனுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நேற்று முன்தினம் வந்தார். அவர் அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு,கொன்று புதைக்கப்பட்ட புச்சா நகருக்கு நேரில் சென்று பார்த்தார். ரஷிய படைகளின் தாக்குதலில் பெருத்த சேதம் அடைந்த போரோடியங்கா நகர அடுக்குமாடி குடியிருப்பை அவர் பார்வையிட்டு வேதனை தெரிவித்தார்.
ஏவுகணை மழை
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஒரு மணி நேரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷியப்படைகள் சற்றும் எதிர்பாராத விதமாக ஏவுகணை மழை பொழிந்தன.
இந்த தாக்குதலில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுகிற வானொலியில் பணியாற்றி வந்த பெண் பத்திரிகையாளர் விரா ஹைரிச் கொல்லப்பட்டார். அவர் வீட்டில் இருந்தபோதுதான் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் காலை இழந்துவிட்டார். பலியான பெண் பத்திரிகையாளர் உடல், பிரேத பரிசோதனைக்காக நேற்று காலையில் எடுத்துச்செல்லப்பட்டதாக அங்கிருந்து வருகிற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு அற்புதமான நபர் கொல்லப்பட்டு விட்டார் என்று பெண் பத்திரிகையாளர் விரா ஹைரிச் பணியாற்றி வந்த ரேடியோ லிபர்ட்டியின் அதிபர் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் தங்கிய ஓட்டல் மீதும்…
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தங்கிய ஓட்டல் மீதும் ஒரு ஏவுகணை தாக்கியதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் அவரும், அவருடைய குழுவினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், சம்பவத்தின்போது ஆண்டனியோ குட்டரெஸ் ஓட்டலில் இல்லை, உக்ரைன் பிரதமர் அலுவலகத்தில் இருந்தார் எனவும் ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை தாக்கதலால் தான் அதிர்ந்து போனதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசும் தெரிவித்தார்.
கீவ் நகர தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கண்டனம் ெதரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “உலகளாவிய அமைப்புகள் மீது ரஷியாவின் உண்மையான அணுகுமுறையை, ஐ.நா.வை ரஷிய அதிகாரிகள் அவமானப்படுத்தும் முயற்சியை இது காட்டுகிறது” என தெரிவித்தார்.
இந்த ஏவுகணை தாக்குதலை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுபற்றி ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவிக்கையில், “கீவில் ராக்கெட் ஆலை மீது துல்லிய ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. 10 ராணுவ கட்டமைப்புகள் மீதும் வான்தாக்குதல் நடந்தது. 3 மின்நிலையங்கள் அழிக்கப்பட்டன” என கூறியது. ஆனால் அடுக்கு மாடி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி வாய் திறக்கவில்லை.
இதற்கிடையே உக்ரைனில் தொண்டு செய்து வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்களான பால்யூரே, டிலான் ஹீலி ஆகிய இருவரை ரஷிய படைகள் பிடித்துள்ளன.
மரியுபோல் நகரத்தில் உள்ள அஜோவ் உருக்காலையில் உள்ளவர்களை வெளியேற்றும் பணி இன்னும் நடைபெறவில்லை. இந்த ஆலையில் 2 ஆயிரம் வீரர்களும், 1,000 பொதுமக்களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு உக்ரைனில் உள்ள சொலோவியோ என்ற கிராமத்தில் ரஷிய படைகள், தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிபொருட்களை பயன்படுத்தியதாக பிராந்திய ராணுவ தலைவர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.