இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிப்பு.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் ஜூன் 7-ந் தேதியும், 2-வது ஆட்டம் கொழும்பில் ஜூன் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கண்டியில் ஜூன் 11-ந் தேதியும் நடக்கிறது.
முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டியில் முறையே ஜூன் 14, 16-ந் தேதியும், 3-வது, 4-வது, 5-வது ஒருநாள் போட்டிகள் கொழும்பில் ஜூன் 19, 21, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. முதலாவது டெஸ்ட் காலேயில் ஜூன் 29-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் காலேயில் ஜூலை 8-ந் தேதியும் தொடங்குகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடந்து வருவதால் ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செய்து விளையாடுமா? என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச் நீடிக்கிறார்.
டெஸ்ட் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் தொடருகிறார். டெஸ்ட் அணியில் இருந்து இடக்கை பேட்ஸ்மேன் மார்கஸ் ஹாரிஸ் நீக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டி தொடரில் டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான குறுகிய வடிவிலான தொடரில் இடம் பெறாத ஹேசில்வுட், மிட் செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மேத்யூவேட், மேக்ஸ்வெல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் மனைவிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்ததொடரில் இருந்து விலகி இருக்கிறார்.