கோட்டா – மஹிந்த இடையே எந்த முரண்பாடும் இல்லை ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.”
இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை.
ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ கோரவில்லை. எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்; நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது” – என்றார்.