இடைக்கால அரசு வேண்டாம் முதலில் கோட்டாபய வீட்டுக்குப் போகட்டும்.

“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண இடைக்கால அரசு தேவையில்லை. புதிய அரசே வேண்டும். அதற்கு முன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியைத் துறந்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
புதிய பிரதமருடன் இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஆதரவு வழங்காது. இதை எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டார்.
அரசிலிருந்து வெளியேறிச் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தனது பதவியைத் தக்க வைப்பதற்காகவுமே இடைக்கால அரசு அமைய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கலாம்.
ஜனாதிபதி விரும்பும் புதிய பிரதமர் யார்? அண்ணனை (மஹிந்த ராஜபக்ச) பிரதமர் பதவியிலிருந்து தான் விலகச் செல்லவில்லை என்று தெரிவித்த கோட்டாபய, எப்படி புதிய பிரதமரை நியமிக்கப் போகின்றார்?
எனவே, நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண இடைக்கால அரசு தேவையில்லை. புதிய அரசே வேண்டும். அதற்கு முன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியைத் துறந்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் புதிய அரசு சுதந்திரமாகச் செயற்பட முடியும்.
தற்போதைய அரசை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தோற்கடித்துவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் புதிய அரசை நாம் நிறுவுவோம்” – என்றார்.