இடைக்கால அரசுக்குச் சந்தர்ப்பம் இல்லை; பிரதமர் பதவியிலிருந்தும் விலகமாட்டேன்! மஹிந்த மீண்டும் திட்டவட்டம்.
“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு இடைக்கால அரசு தீர்வு அல்ல. அப்படிப்பட்ட அரசு தற்போது அமையவும் சந்தர்ப்பம் இல்லை.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தம்மிடம் நேற்றிரவு உறுதியளித்தார் என்று அவரின் சகாவும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“மகாசங்கத்தினர் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் பிரதமர் பதவியிலிருந்து தான் ஒருபோதும் விலகமாட்டார் என்றும், மக்கள் ஆணையின் பிரகாரம் அந்தப் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை முன்நகர்த்துவார் என்றும் பிரதமர் எம்மிடம் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் 113 இற்கும் மேற்பட்டோரின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசுக்கு இருக்கின்றபோது பிரதமர் பதவியை எப்படி இராஜிநாமா செய்ய முடியும் என்றும் பிரதமர் எம்மிடம் கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அவர் அரசமைப்பை மீறிச் செயற்படவில்லை. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசமைப்பின் பிரகாரமே அவர் செயற்படுகின்றார். குறுக்கு வழியில் பிரதமரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு ஆட்சியமைக்கத் துடிப்போர் இதைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.
எனினும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி சர்வகட்சி அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய – தற்போது சுயாதீனமாகச் செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.