நாடாளுமன்றத்தில் மே 4ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிப்போம்! எதிரணி பிரதம கொறடா உறுதி.
“எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது எதிரணி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும்.”
இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“19 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், 20 ஐ நீக்குவதற்கு ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இப்படியானவர்களுடன் எப்படி இடைக்கால அரசை முன்னெடுப்பது?
எதிரணிக்குரிய பொறுப்பை நிறைவேற்றவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே, இடைக்கால அரசில் இணைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துவிட்டது. எதிரணிப் பக்கம்தான் பெரும்பான்மைப் பலம் உள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி அதனை நிரூபிப்போம்” – என்றார்.