வெப்பமான ஏப்ரல்…122 ஆண்டுகளில் இல்லாத வெயில்: 9 மாநிலங்களில் பதிவாகியது
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெறிக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் அதி தீவிர வெயில் காலம் மே 4ம் தேதி துவங்குகிறது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது. நேற்று 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
தமிழகத்தில் விட இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு மிகவும் வெப்பமான ஏப்ரல் மாதத்தை எதிர்கொண்டன.
மத்திய இந்தியாவில் சராசரி அளவாக 37.78 டிகிரி செல்சியஸ் அளவும் வடமேற்கு இந்தியாவில் சராசரி அளவாக 35.9 டிகிரி செல்சியஸ் அளவும் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.35 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
நாடு முழுவதும் கடந்த 122 ஆண்டுகளில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் பதிவான 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது 4ஆவது அதிகபட்ச வெப்பநிலையாகும். நாடு 1973, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிக வெப்பமான ஏப்ரல் மாதத்தை கண்டது. உண்மையில், 2010 ஆம் ஆண்டு, நாடு கடந்த முறை மிகக் கடுமையான மற்றும் அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலைகளைக் கண்டது, இது மக்களைப் பெருமளவில் பாதித்தது.
தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தொடர் மின்வெட்டு அமலில் இருந்துவருகிறது. இத்தகைய சூழலில் நடப்பாண்டு வெயில் காலம் என்பது மக்களுக்கு கடும் சவால்மிக்க ஒன்றாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.