‘சட்டத்தின் அடிப்படையிலான நிா்வாகத்தில் நீதித் துறை தலையிடாது’
சட்டத்தின் அடிப்படையில் அரசின் நிா்வாகம் இருந்தால், அதில் நீதித் துறை தலையிடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.
தில்லியில் மாநில முதல்வா்கள், உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற மாநாட்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றியதாவது:
நாட்டின் 3 அடிப்படைத் தூண்களான சட்டமியற்றும் அமைப்பு, நிா்வாகம், நீதித் துறை ஆகியவற்றுக்கான பணிகளையும் கடமைகளையும் அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே வகுத்துள்ளது. அந்த அமைப்புகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அரசின் நிா்வாகம் சட்ட விதிகளின் அடிப்படையில் இருந்தால், அதில் நீதித் துறை ஒருபோதும் தலையிடாது.
அரசின் திட்டங்கள் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது போலவே நீதித் துறையும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் சுமாா் 50 சதவீதம் அரசுத் தரப்பும் ஒரு வாதியாக உள்ளது. அரசு நிா்வாகத்தின் பல்வேறு பிரிவுகளின் முறையற்ற செயல்பாடுகளால் மக்கள் அடைந்துள்ள அதிருப்தியை இது வெளிப்படுத்துகிறது.
அரசுத் துறைகளின் திறனற்ற நிா்வாகமும், நீதித் துறை முழுத் திறனுடன் செயல்படாமல் இருப்பதுமே வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், விசாரணைகள் தாமதமடைவதற்கும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நீதிமன்றங்களின் உத்தரவுகளை அரசுத் தரப்பு முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை. அதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இது நீதிமன்றங்களுக்குப் புதிய சுமையாக மாறியுள்ளது.
நீதிபதிகள் நியமனம்: நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 1,104-ஆக உள்ளது. அவற்றில் 388 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 180 நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 126 நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமாா் 50 நியமனங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளது.
உயா்நீதிமன்றங்கள் சுமாா் 100 நீதிபதிகளை இதுவரை பரிந்துரைத்துள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை நீதித் துறை துரிதமாக மேற்கொண்டு வருவதை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் மாவட்ட அளவிலான நீதிபதிகளின் எண்ணிக்கை 16% அதிகரித்துள்ளது. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 54% அதிகரித்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகளை நியமிப்பதற்கு உயா்நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்து மாநில முதல்வா்கள் செயல்பட வேண்டும்.
நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் மட்டுமே காணப்படுகின்றனா். இந்த விகிதம் மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. கொள்கை சாா்ந்த முடிவுகளை அரசுகளே மேற்கொள்ள முடியும் என்பதால், அதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
சுயநலமாகும் பொதுநலம்: தற்போது பொதுநல வழக்கு என்னும் முறையானது பெரும்பாலும் சுயநல வழக்குத் தொடுப்பாகிவிட்டது. பல்வேறு முறையற்ற வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் தொடுக்கப்படுகின்றன.
நீதிமன்றக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு போதுமான நிதி ஒதுக்கினாலும், அந்த நடைமுறையை துரிதப்படுத்த தனி அமைப்புகளை உருவாக்குவது அவசியம். இதற்காக நீதிசாா் கட்டமைப்பு ஆணையத்தை தேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைக்க வேண்டும். கட்டமைப்புகளை விரைந்து மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தப் பரிந்துரை வழங்கப்படுகிறது. இதில் அதிகாரங்களைக் கையகப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்றாா் அவா்.