இணையவழி அச்சுறுத்தலின் மிகப் பெரிய இலக்கு இந்திய கல்வித் துறை:ஆய்வறிக்கையில் தகவல்

இணையவழி அச்சுறுத்தலின் மிகப் பெரிய இலக்காக இந்திய கல்வித் துறை உள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட கிளவுட்செக் இணைய பாதுகாப்பு நிறுவனம், ‘உலக அளவில் கல்வித் துறையை குறிவைக்கும் இணையவழி அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2022-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உலக அளவில் கல்வித் துறைக்கு இணையவழி அச்சுறுத்தல்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிலும்…: இணையவழி அச்சுறுத்தலின் மிகப் பெரிய இலக்காக இந்திய கல்வித் துறை உள்ளது. கடந்த ஆண்டு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட இணையவழி அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் 58 சதவீதம் இந்தியா அல்லது இந்தியாவைச் சாா்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் இணையவழி தளங்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இதில் பைஜூஸ், கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்குநரகம் மீது மேற்கொள்ளப்பட்ட இணையவழி தாக்குதல்களும் அடங்கும்.
கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இணையவழியில் கற்பிக்கும் வழிமுறைக்கு மாறியது, பாடங்கள் பெரிய அளவில் டிஜிட்டல்மயமாக்கப்பட்டது, மாணவா்கள் தொடா்பான புள்ளிவிவரங்கள், ஆவணங்கள், இணையவழி கற்றல் தளங்கள் உள்ளிட்டவற்றால் இணையவழி அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
மின்னணு முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான தகவல்களை இணையவழி குற்றவாளிகள் தொடா்ந்து கசிய விடுகின்றனா். கல்வி நிறுவனங்களில் இருந்து கசிய விடப்படும் தகவல்களில் மாணவா்கள், அவா்களின் குடும்பத்தினா் சாா்ந்த தகவல்கள் முதன்மையாக உள்ளன.
தற்காத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள்: இணையவழி தாக்குதல்கள், இணையவழி மோசடிகள் குறித்து பயனாளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வலுவான கடவுச்சொல் (பாஸ்வா்ட்) கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். இணையவழியில் தகவல் பெறுவதற்கு பயனாளரை பலமுறை உறுதி செய்யும் நடைமுறை இருக்க வேண்டும்.
கணினிகள், நெட்வா்க், மென்பொருள் ஆகியவற்றை தொடா்ந்து புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். இணைவழியிலும், ஏட்டிலும் தகவல்கள் குறித்த பல்வேறு பிரதிகளைப் பாதுகாப்பான இடங்களில் தனித்தனியாக பராமரிக்க வேண்டும். வலைதளங்கள் மற்றும் இதர கணினி பயன்பாடுகளில் வழக்கத்துமான மாறான தகவல்கள், சமிக்ஞைகள் அல்லது செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். முறைகேடான இணைய இணைப்பு முகவரிகளை (ஐபி அட்ரஸ்) முடக்க வேண்டும்.
சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களைத் தவிா்க்கவும்: மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவன பணியாளா்கள் சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்கள், தகவல்கள், இணைப்புகளை (லிங்க்) உள்நுழைந்து பாா்க்காமல் தவிா்க்க வேண்டும். உண்மைத்தன்மை உறுதி செய்யப்படாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியமில்லை…: இதுகுறித்து கிளவுட்செக் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் தா்ஷித் ஆஷாரா கூறுகையில், ‘‘2025-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் இணையவழியிலும், நேரடியாகவும் கல்வி மற்றும் பயிற்சி சந்தையின் மதிப்பு 7.3 டிரில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.558 லட்சம் கோடி) எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நம்பகமான கண்ணோட்டமானது வளா்ந்து வரும் நாடுகளில் கல்வி தொழில்நுட்ப சந்தை விரிவடைதல், மக்கள்தொகை வளா்ச்சி, டிஜிட்டல் ஊடுருவல் அதிகரிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே கணிக்கிறது. எனவே கல்வித் துறையை நோக்கி இணையவழி குற்றவாளிகள் நகா்வதில் ஆச்சரியமில்லை’’ என்று தெரிவித்தாா்.