இலங்கை மோசமான நிலையில் சிக்கியுள்ளது.. அவர்களுக்கு துணை நிற்போம்! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் துணை நிற்போம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுக-வில் இணையும் விழா நடந்தது. சுமார் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபெற்ற இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
அப்போது உரையாற்றிய அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு என்பது 73 ஆண்டுகாலம் என்றும், இன்னும் 2 ஆண்டுகளில் 75ஆம் ஆண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என்றும் கூறினார்.
மேலும் நீண்ட உரையாற்றிய அவர் இலங்கை மக்கள் குறித்து பேசும்போது, ‘இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த நம்முடைய தொப்புள் கொடி உறவுகளும் தமிழர்கள். அந்த ஈழத்தமிழர்களுக்கு பேருதவியாக பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்ததுடன், இலங்கையில் இருந்து திரும்பிய தமிழ் உறவுகளுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமூக பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி இருக்கும் ஆட்சிதான் நம்முடைய கழக ஆட்சி. அவர்களை இனிமேல் அகதிகள் என்று அழைக்கக் கூடாது. அகதிகள் முகாம் என்று அழைக்கக் கூடாது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அதற்கு பெயர் சூட்டி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்வதற்கு, 13 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைகே குழுவையும் நாம் அமைத்திருக்கிறோம்.
இப்போது இலங்கையில் என்ன நிலை என்று உங்களுக்கு தெரியும். ஒரு மோசமான நிலையில் சிக்கி, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, அங்கிருக்கும் இலங்கை வாழ் மக்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவேதான் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி அனுப்ப வேண்டும், அந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
அவர்களுக்கு வேண்டிய முடிந்த அளவிற்கு நம்மாலான சலுகைகளை, உதவிகளை செய்யவேண்டும் என முடிவெடுத்து நான் நேரடியாக டெல்லிக்கு சென்றிருந்தபோது மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து கூறியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து, அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்று அந்த இந்நிலையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.