கருங்கடலில் ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழிப்பு.
கருங்கடலில் ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இருந்தபோதிலும், உக்ரைனை அடிபணிய வைக்கும் ரஷியாவின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. மாறாக உக்ரைனை போலவே ரஷியாவும் இந்த போரில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தி வந்த, ரஷியாவின் மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பலை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி கடலில் மூழ்கடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
ஆனால் அதை மறுத்த ரஷியா, போர்க்கப்பலில் தீப்பற்றி, அதனால் கடலில் மூழ்கியதாக தெரிவித்தது. இதில் ஒரு மாலுமி பலியானதாகவும், 20-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்தது. அவர்களின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
இந்த நிலையில் கருங்கடலில் நேற்று ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி கூறுகையில் “இன்று காலை ஸ்மினி தீவு அருகே கருங்கடலில் ரஷியாவின் ராப்டார் பிரிவு ரோந்து கப்பல்கள் இரண்டை உக்ரைன் வீரர்கள் ‘டிரான்’ மூலம் தாக்கி அழித்தனர்” என்றார்.
இதனிடையே கருங்கடலில் ரஷிய கப்பல்கள் டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட வீடியோ ஒன்றை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து ரஷியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைனின் ‘மிக்29’ ரக போர் விமானத்தை அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதவிர கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு ஏவுகணைகள், 10 டிரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் கூறியுள்ளது.
இதனிடையே உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட அஜோவ் உருக்காலையில் இருந்து பல வாரங்களுக்கு பின்னர் டஜன் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
இரு மாதங்களாக தான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கவில்லை எனவும், தான் உயிர்பிழைக்க மாட்டேன் என எண்ணியதாகவும், அங்கிருந்து வெளியேறிய பெண் ஒருவர் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள சாப்போரீஷியா நகருக்கு வந்துகொண்டிருப்பதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். 100 பேர் அடங்கிய முதலாவது குழு சாப்போரீஷியா வந்து சேர்ந்துள்ளதாகவும், அந்த ஆலையில் உள்ள மற்றவர்களையும் வெளியேற்ற ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைனின் மெலிடோபோல் நகரில் முற்றுகையிட்டுள்ள ரஷிய வீரர்கள் அந்த நகரில் இருந்து, அறுவடை எந்திரங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை திருடி ரஷியாவின் செச்சினியாவுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரையில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 கோடி) மதிப்பிலான விவசாய உபகரணங்கள் ரஷிய படைகளால் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ரஷியாவில் உக்ரைன் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள பெல்கோரோட் பிராந்தியத்தில் நேற்று காலை அடுத்தடுத்து 2 பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. உக்ரைன் ராணுவம் தங்களது எல்லையோர நகரங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக ரஷியா அவ்வப்போது குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த இரட்டை குண்டு வெடிப்பு நடந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.