6 பிள்ளைகள் முன்னிலையில் 3 காதலிகளைக் கரம்பிடித்தார் பழங்குடியின நபர்
கடந்த 15 ஆண்டுகளாக 3 காதலிகளுடன் வசித்து வந்த பழங்குடியின நபர், தனது 6 பிள்ளைகள் முன்னிலையில் தற்போது விமரிசையாக திருமணம் செய்து கொண்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு தனது மூன்று காதலிகளை ஒரே நிகழ்வில் மணமுடித்திருக்கிறார் மணமகன். அவர்களது வழக்கப்படி விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
நான்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராமத் தலைவர் சமர்த் மௌரியா. இவர், வறுமை காரணமாக தனது மூன்று காதலிகளையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வந்தார். அவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. மூன்று காதலிகளுக்கும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொடுத்து அனைவரையும் நல்ல முறையில் வைத்திருக்கிறாராம் மௌரியா.
இந்த நிலையில், தற்போது 6 குழந்தைகள் முன்னிலையில் தனது காதலிகளை கரம்பிடித்துள்ளார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது குறித்து அறிந்த சமர்த் மௌரியவும் அவரது பிள்ளைகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மணமகன் பெயருடன், மணமகள்கள் மூன்று பேரின் பெயர்களும் அச்சடித்து திருமணப் பத்திரிகை உறவினர்களுக்கு கொடுத்து, சிறப்பான விருந்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாததால், இவர்களது மரபுப்படி, உறவினர்களின் குடும்ப நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை இருந்ததாகவும், இனி சமர்த் மௌரியாவும், அவரது 3 மனைவிக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்றும் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூறியுள்ளனர்.
உடனடியாக மூன்று பெண்களை ஒருவர் எவ்வாறு மணமுடிக்கலாம் என்றும், இது சட்டத்துக்கு விரோதம் என்றும் எண்ணம் தோன்றுகிறதா? அப்படியானால், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 342, பழங்குடியின மக்களின் கலாசாரம் உள்ளிட்ட சமூக மரபுகளை பாதுகாக்கிறது என்பதையும், இந்த சட்டப்படி, சமர்த் மௌரியாவின் திருமணம் சட்டப்படி குற்றமாகாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.