போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட நபர் மர்ம மரணம் – அடித்தே கொன்றதாக உறவினர்கள் புகார்
சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜ் (45). இவர் ஆட்டோவுக்கு பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, குடி பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மனைவி கலாவுடன் சென்றுவிட்டு திரும்பிய ராஜ் மது அருந்தியிருந்த நிலையில், மீண்டும் மனைவி கலாவுடன் வாக்குவாதம் செய்து பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் இணைந்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள “Madras Care Centre” என்ற போதை மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, மது போதைக்கு அடிமையான கணவரை போதை மறுவாழ்வு மையத்தினர் நள்ளிரவில் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் ராஜ் உயிரிழந்துவிட்டதாக போதை மறுவாழ்வு மையத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் அதிர்ச்சியடைந்த மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ராஜின் உடலில் பலத்த ரத்த காயங்களுடன் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜுவின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் போதை மறுவாழ்வு மையத்தின் மேனேஜர் மோகன் தாங்கள் ராஜூவை அடிக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால், ராஜூவின் உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட தடயங்கள் இருப்பதுடன் அவரது தலையில் பலத்த காயம் இருந்ததால் போதை மறுவாழ்வு மையத்தின் மேனேஜர் மோகன் மற்ற ஊழியர்களான ஜெகன்(24), பார்த்தசாரதி(23) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் நேரில் வந்து சோதனை மேற்கொண்டார். சோதனையில் உடைந்துபோன பிரம்பு மற்றும் ராஜின் கிழிந்த ஆடைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ராஜின் குடும்பத்தார்கள், ராஜியை அடித்தே கொலை செய்துவிட்டார்கள் என அண்ணா சாலை காவல் நிலையத்தில் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜின் சகோதரி முனியம்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனது தம்பியை போதை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அடித்தே கொன்று விட்டதாகவும் தாங்கள் போதை பழக்கத்திலிருந்து தங்களது தம்பியை மீட்பதற்காக தான் அங்கு சேர்த்தோம், ஆனால் போதை மறுவாழ்வு மையத்தில் தங்களது தம்பி ராஜியை சித்திரவதை செய்து கொன்று விட்டதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார். இந்த சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.