பஸிலின் அதிக சொத்துக்கள் நடேசனின் பெயரில் பதுக்கல் தகவலை வெளியிட்டார் அநுர.

“முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவின் பெரும்பாலான சொத்துகள் திரு நடேசனின் பெயரில்தான் பதுக்கப்பட்டுள்ளன. மல்வானை காணி விவகாரத்தில்கூட பாரிய ஊழல்கள் உள்ளன.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளின்கீழ் ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ எனும் அமைப்பால் கொழும்பு மன்றத்தில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் ஊழல், மோசடிகள் குறித்த தகவல்களை அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தினார். பெருமளவான ஆவணங்களும் ஊடக சந்திப்பின்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
“எயா பஸ்களை வாங்குவாறு, பிரான்ஸின் எயா பஸ் நிறுவனம் அழுத்தம் பிரயோகித்துள்ளது. இது குறித்து சர்வதேச விசாரணை இடம்பெற்றது. இது தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த எயா பஸ்களை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் வீட்டில் கூட்டம் நடந்துள்ளது. சமல் ராஜபக்சவின் மகனும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார். எயா லங்கா நிறுவனத்தில் அவர் பதவி வகித்துள்ளார்” என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
“2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்தச் செலவுகளைச் செய்தாகச் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாஸ, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த ஆகியோர் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்” என்ற தகவலையும் அநுரகுமார வெளியிட்டார்.
யோசித ராஜபக்சவின் காணிகள் குறித்த தகவல்களும் அம்பலப்படுத்தப்பட்டன.