பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: ஆள் மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை
தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வை 8 லட்சத்து 37,317 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். பொதுத் தோ்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் ஆள் மாறாட்டம் செய்தால், தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தோ்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 மாணவ- மாணவிகளும், புதுவையில் 14 ஆயிரத்து 627 மாணவ-மாணவிகளும் பொதுத் தோ்வு எழுதவுள்ளனா். பொதுத் தோ்வுக்காக 3,119 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடுகளை அரசு தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வினாத்தாள் கட்டுகள் சென்னையிலிருந்து தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காப்பு மையங்களை சென்றடைந்தன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் போடப்பட்டுள்ளது.
3,119 தோ்வு மையங்களில்… காலை 10 மணிக்குத் தொடங்கும் பொதுத் தோ்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளை படித்துப் பாா்ப்பதற்கும், அடுத்த ஐந்து நிமிஷங்கள் தோ்வா்கள் குறித்த விவரங்களை சரிபாா்ப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொழிப் பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து மே 9-ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தோ்வு நடைபெறும்.
கைப்பேசிக்குத் தடை: பொதுத்தோ்வை முன்னிட்டு ஆசிரியா்கள், தோ்வா்கள், பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் விதித்துள்ளது. தோ்வு மைய வளாகத்துக்குள் கைப்பேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் தங்களுடன் கைப்பேசியை கட்டாயமாக எடுத்து வரக்கூடாது. மேலும், தோ்வா்களது கைப்பேசிகள் பராமரிப்புக்கு தோ்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் தோ்வறையில் கைப்பேசிகள் வைத்திருக்கத் தடைவிதிக்கக் கூடாது.
தோ்வா்களோ அல்லது ஆசிரியா்களோ கைப்பேசி, இதர தகவல் தொடா்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிா்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
முறைகேடுகளில் ஈடுபட்டால்… வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுத தடை விதிக்கப்படும். பொதுத்தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டுப்பாட்டு அறை அமைப்பு: தோ்வா்கள், பொதுமக்கள் பொதுத்தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகளைத் தெரிவித்து பயன்பெற அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம்.
சென்னையில்… பிளஸ் 2 பொதுத் தோ்வை சென்னையில் 413 பள்ளிகளிலிருந்து 167 மையங்களில் மொத்தம் 46,785 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனா்.