கிழக்கு உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தீவிர தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீதான ரஷிய போர் நேற்று 70-வது நாளை எட்டியது. இந்த போர் தொடங்கியதில் இருந்து தங்கள் நாட்டுக்கு சர்வதேச நிதி உதவியாக 4.73 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரத்து 475 கோடி) கிடைத்துள்ளது என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் சுமிஹால் தெரிவித்துள்ளார்.
போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகரத்தில் உள்ள 3 துணை மின் நிலையங்கள் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அந்த நகரத்தின் சில பகுதிகள் இருளில் மூழ்கின. தண்ணீர் வினியோகமும் பாதித்தது.
ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்த துணை மின்நிலையங்களில் தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.
கிழக்கு உக்ரைன் மீதான இலக்குகளை ரஷியா நேற்றும் கடுமையாக தாக்கியது. கடல் மற்றும் வான்வழியாக துல்லிய ஏவுகணை ஏவி, 5 ரெயில் நிலையங்களின் மின் கட்டமைப்பை அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்களில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல், மேற்கத்திய நாடுகளின் ஆயுத வினியோகத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கை என்று ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார்.
உக்ரைனை மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களால் நிரப்புவதாக ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் இன்னும் கைப்பற்ற முடியாத நிலையில் இருக்கிற அஜோவ் உருக்காலை மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. அந்த ஆலைக்குள் 500 பேர் காயங்களுடன் தங்கி இருப்பதாகவும், அவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உளளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ஆலையில் பதுங்கு குழிக்குள் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்ற முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
ஐ.நா.சபை மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் அதிகமான மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறுவதாக மேயர் தெரிவித்தார்.
உக்ரைன் போரில் ரஷியா பக்கம் உள்ள பெலாரஸ், பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை ஆரம்பித்து இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்கிவ் நகரில் இருந்து ரஷிய படைகள், உக்ரைன் படைகளால் துரத்தியடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.