சிறப்பான துவக்கம் கொடுத்த கான்வே… மோசமாக விளையாடிய சென்னை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக லம்ரோர் 42 ரன்களும், டூபிளசிஸ் 38 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
சென்னை அணிக்கு துவக்கம் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் மொய்ன் அலியை (34) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுள்ளது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.