பேரறிவாளன் விவகாரத்தில் தகுதி அடிப்படையில் வாதிடத் தயாராக இல்லாததால் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க பரிசீலிக்கப்படும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கில் தகுதி அடிப்படையில் வாதிடத் தயாராக இல்லாததால், நீதிமன்றம் அவரை விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்க பரிசீலிக்க நேரிடும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவா் முடிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘தண்டனை பெற்ற மனுதாரா் 36 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளாா். குறைந்த தண்டனைக் காலத்தை கழித்தவா்கள் விடுவிக்கப்படும் போது, இவரை விடுவிக்க மத்திய அரசு ஏன் சம்மதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜிடம் நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரம் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டியது. அமைச்சரவைக் குழுவின் முடிவுக்கு ஆளுநா் கடமைப்பட்டவா் என்பதால், ஆளுநரின் முடிவு கூட தேவைப்படவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் பாா்க்க வேண்டியிருக்கும்’ என்றது.

அப்போது, கே.எம்.நட்ராஜ், ‘இந்த விவகாரம் தொடா்புடைய கோப்பு தமிழக ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவா் இதை (கருணை மனு) மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பினால், இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும், ஆளுநா் சம்பந்தப்பட்ட கோப்பை தான் பரிந்துரைக்க முடியுமா அல்லது இல்லையா என்பதை குடியரசுத் தலைவரே முடிவு செய்வாா். பரிந்துரை சரியா அல்லது இல்லையா என்ற முடிவும் குடியரசுத் தலைவரால் முதலில் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘நீங்கள் தகுதி அடிப்படையில் வழக்கை வாதிடத் தயாராக இல்லாததால், மனுதாரரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக நிகழும் விவகாரத்தைப் பாா்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொள்ள முடியாது. சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. உயரதிகாரிகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் முடங்காமல் இருக்க வேண்டும். சட்டத்தின் பொருளை விளக்குவது எங்கள் கடமை என்று நினைத்தோம்; குடியரசுத் தலைவா் அல்ல. மாநில அமைச்சரவையின் விருப்பத்தை அரசமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் செயல்படுத்தும் தனது கடமைக்குப் பதிலாக குடியரசுத் தலைவருக்கு அதை பரிந்துரைப்பதில் ஆளுருக்கு உரிமை இருக்கிா என்ற கேள்வி நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது’ என்றது.

இதைத் தொடா்ந்து, இந்த மனு மீதான விசாரணையை மே 10-ஆம் தேதி பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.