தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல்… கேரளாவிற்கு கடத்த முயன்ற 8டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் களியக்காவிளை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான மினிலாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து கேரளாவிற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் ரேஷன் அரிசியை கடத்தி வந்த மினிலாரி ஓட்டுநரான குமரி மாவட்டம் பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த (25வயது) தினேஷ்குமார் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடத்தி வரப்பட்ட 8டன் ரேஷன் அரசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் களியக்காவிளை காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த காவல் துறையினரை பாராட்டினார்.
இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே 63 வயது முதியவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழ்மை நிலையிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நோக்கில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த வெங்கடாசலபதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கன்யாகுமரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் நியாய விலை கடையில் பணியாற்றிய அவர் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் நண்பர்கள் உதவியுடன் வெங்கடாசலபதியை கொலை செய்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் அமைக்கபட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.