ஏவுகணை சோதனைக்கு கண்டனம் – ‘வடகொரியா பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்.
உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் அந்த நாடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை சோதனையை கிழக்கு கடலில் நடத்தியது. இது இந்த ஆண்டின் 14-வது ஏவுகணை சோதனை ஆகும்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கண்டனம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஏவுகணை சோதனையானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறிய செயல் என்பது தெளிவு. வடகொரியாவின் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை திட்டமும், அதன் அணு ஆயுத திட்டங்களும் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதை இது காட்டுகிறது. அவர்கள் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். அவர்கள் இந்தோ பசிபிக் முழுவதற்குமான அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
எங்கள் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஐப்பான் பாதுகாப்புக்கான எங்களது அர்ப்பணிப்பு, இரும்புக்கவசம் போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “மேலும் ஆத்திரத்தை தூண்டுவதை தவிர்க்கவும், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக ஆக்குகிற விதத்தில் நிலையான, உறுதியான பேச்சு வார்த்தையில் ஈடுபடவும் வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என குறிப்பிட்டார்.