உடன் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை – ஜனாதிபதி, பிரதமரிடம் எதிரணி சுட்டிக்காட்டு.
ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாகப் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையை இதுவரை ஆண்ட எந்தவொரு அரசும் வங்குரோத்து நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்லவில்லை. எனினும், இந்த அரசு நாட்டை வங்குரோத்து அடைய வைத்துள்ளது.
நாட்டை வங்குரோத்து அடைய வைத்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை என நீதி அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் இன்று வெளியில் தலைகாட்ட முடியவில்லை. நாடாளுமன்றத்துக்கு முன்பாகவும் கிராமம் ஒன்று உருவாகியுள்ளது. எம்மையும், எமது உறவினர்கள் திட்ட ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் கதைக்கின்றீர்கள், என்னதான் தீர்வு என அவர்கள் கேட்கின்றனர். இதற்கு என்ன பதிலை வழங்குவது?
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினால், அப்பணத்தைக் கொள்ளையடிக்க முடியாது என்பதால்தான் ஆட்சியாளர்கள் ஐ.எம்.எப்பை அன்று நாடவில்லை. தற்போது தலைக்கு மேல் வெள்ளம் வந்துள்ள நிலையில்தான் அங்கு சென்றுள்ளனர்” – என்றார்.