‘ஹர்த்தால்’ போராட்டத்தால் முழு நாடும் முற்றாக முடக்கம் அரசே வீட்டுக்குப் போ எனக் கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இலங்கை முழுவதும் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரச, தனியார் துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
இதற்கு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வர்த்தகர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதனால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதுடன், நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, தனியார் பஸ் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. அத்துடன் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று இ.போ.ச. பஸ் சங்கங்கள் சில போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
1953ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹர்த்தாலுக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் பெரிய ஹர்த்தால் போராட்டமாகவே இது பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இன்றைய ஹர்த்தாலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாட்டின் பல இடங்களில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசே வீட்டுக்குப் போ” எனக் கோரி கோஷமிடுகின்றனர்.