காலிமுகத்திடல் போராட்டத்தை நிறுத்தப் படாதபாடுபடும் பொலிஸார்!
கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலக முன்றலில் உள்ள தடையை அகற்றுமாறு பொலிஸார் முன்வைக்கவிருந்த கோரிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதி பிரதம நீதிவான் முன்னிலையில் முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்படவிருந்த கோரிக்கையை ஆராய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று விலகியதை அடுத்து, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சவேந்திர விக்கிரம தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் தயாரெனில், தாம் கோரிக்கையை முன்வைப்பதாக அரச சட்டத்தரணி சவேந்திர விக்ரம இன்று தெரிவித்தார்.
கோரிக்கையின் தன்மை தொடர்பில் திறந்த நீதிமன்றத்தில் எந்த விடயமும் முன்வைக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் குழுவுடன் ஆஜரான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரச சட்டத்தரணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனாவெல, இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதில் இருந்து தான் விலகுகின்றார் எனவும், கோரிக்கை வேறு நீதிவானிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.