கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
15வது ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 45 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 44 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான சஹா 55 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்து கொடுத்தனர். குஜராத் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தால், மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
நடப்பு தொடரின் பல போட்டிகளில் கடைசி ஓவர்களில் காட்டடி அடித்ததன் மூலம் பல வெற்றிகளை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியை, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டேனியல் சம்ஸ், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தி வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில், குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான டிம் டேவிட், டேனியல் சம்ஸ் போன்ற வீரர்களுக்கும் அதிமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.