ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்…!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.
பிந்திய செய்தி
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, பிரச்சினைகள் தொடர்பில் பேச வேண்டுமாயின், திங்கட்கிழமை காலை சிறிகொத்தவிற்கு வருமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு 07, 5ஆம் இலக்கத்தில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
பிரதி சபாநாயகர் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வாக்களிக்குமாறு ரணிலின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் வற்புறுத்துவதைக் காணமுடிந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பிரதமரின் வீட்டுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டம் ஆரம்பமாகி ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் குழுவும் சம்பவ இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “எங்களுக்கு அரசாங்கம் வேண்டும், ரணிலுடன் கூடிய அரசாங்கம் வேண்டும்” என ரணிலின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ரணிலை தலைவராக நியமிப்பதே நெருக்கடிக்கு ஒரே தீர்வு எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் முன்னாள் பிரதமர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு செய்தியொன்றை அனுப்பி, தம்மைச் சந்தித்து தமது பிரச்சினைகளை கலந்துரையாட விரும்பினால் திங்கட்கிழமை சிறிகொத்தவிற்கு வருமாறு கேட்டுக்கொண்டார். இறுதியில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.