எலுமிச்சை வாங்கியதாக பொய் கணக்கு – சிக்கிய சிறை கண்காணிப்பாளர்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதைப் போல் கோடைக் காலமான தற்போது எலுமிச்சை விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி ஊழல் செய்ய திட்டமிட்ட பஞ்சாப் மாநில சிறை அதிகாரிகள் தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா மார்டன் சிறையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சிறையின் கண்காணிப்பாளராக இருப்பவர் குர்நாம் லால். சந்தையில் எலுமிச்சை பழம் உயர்ந்து இருப்பதால் அதை சிறைவாசிகளுக்கு வாங்குவது போல் பொய் கணக்கு எழுதி அந்த தொகை கொள்ளை அடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, சிறைவாசிகளின் தேவைக்காக 50 கிலோவுக்கும் மேல் எழுமிச்சை வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளார். இவர்களின் ஊழல் தொடர்பான புகார் மெல்ல பஞ்சாப்பின் சிறைத்துறை அமைச்சர் ஹர்ஜோட் சிங்கின் காதிற்கு சென்றுள்ளது. இதையடுத்து,சிறையில் திடீர் ரெய்டு நடத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் யாரும் எதிர்பாரத விதமாக கபூர்தலா சிறைக்கு வந்த உயர் அலுவர்கள் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது சிறைவாசிகளிடம் உணவு குறித்து கேள்வி கேட்டுள்ளனர். தங்களுக்கு எழுமிச்சை உணவு ஏதும் வழங்கப்டவில்லை என சிறைவாசிகள் கூறிய நிலையில், 50 கிலோ எலுமிச்சை வாங்கியதற்கான ஆவணம் இருப்பதாக சிறை அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர்.
அதேபோல், காய்கறி, கோதுமை உள்ளிட்ட பொருள்களிலும் ஊழல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறையின் கண்காணிப்பாளர் குர்நாம் லால்லை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிறையில் நடைபெற்ற ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.