நேபாளத்துக்கு இனி ரயிலில் செல்லலாம் – எட்டு மாநிலங்களை இணைக்கும் இந்திய ரயில்வேயின் புதிய ரயில்!
ரயில் பயணம் என்றாலே, மிகவும் உற்சாகமானது. நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் தான் சிறந்தது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு ரயில் வழியே பயணம் செல்வது வெளிநாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. வெளி நாடுகளில் இருப்பது போல, இந்தியாவிலும் இப்போது புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இப்போது நேபாளத்துக்கு ரயிலில் செல்லலாம்.
இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளை இணைக்கும் இந்தியாவின் முதல் ரயிலாக ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலின் கீழ் இயங்கும், முதல் ரயிலாக இருக்கும். அதே நேரத்தில், இந்த யாத்ரா ரயில் இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன், அதாவது IRCTC மூலம் இயக்கப்படும். ஸ்ரீ இராமாயண யாத்திரை எந்த வழித்தடத்தில் செல்ல இருக்கிறது என்பது இன்னுல் சில நாட்களில் முடிவு செய்யப்படும்.
சமீபமாக ரயில்கள் குத்தகைக்கு விடப்படுகிறது. அதற்கு முன்பே, பாரத் கௌரவ்வால் இயக்கப்படும் இந்த யாத்ரா ரயிலை பற்றிய திட்டத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியது. இந்த புதிய திட்டத்தில் இயக்கப்படும் முதல் ரயில் ஸ்ரீ இராமாயண யாத்ரா என்பதை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களை வழித்தடத்தில் இணைத்துள்ளது மற்றும் நேபாலில் உள்ள ஜனக்பூரை அடையும். ஜனக்பூரில் ராமர் மற்றும் சீதைக்கான, ராம்ஜானகி என்ற பிரசித்தி பெற்ற ஆலயம் உள்ளது.
ரயில்வே அமைச்சகம், இந்த யாத்ரா ரயிலின் முழு பயணம் கிட்டத்தட்ட 8000 கிலோமீட்டர் தூரம் உள்ளடக்கியது என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் இந்த ரயில் பயணிக்கும்.
முழு ரயிலுமே 3rd AC compartment எனப்படும் மூன்றாவது ஏசி பெட்டிகளை கொண்டுள்ளது. வேறு வகையான பெட்டிகள் கிடையாது. இந்த ரயிலின் முதல் பயணம், ஜூன் 21ம் தேதியன்று டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.
ஸ்ரீ இராமாயண யாத்திரை ரயிலின் முழுப் பயணம் நிறைவேற 18 நாட்கள் ஆகும். ஒரு நேரத்தில், தோராயமாக 600 பயணிகள் ரயிலில் பயணிக்க முடியும்.
எட்டு மாநிலங்களில், ஸ்ரீராமருடன் தொடர்புடைய நாட்டில் உள்ள பல நகரங்களை இந்த ரயில் பயணம் இணைக்கிறது. அவை, அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, காசி, பிரயாக், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராச்சலம் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டில், ராமேஸ்வரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களை இந்த ரயில் உள்ளடக்கியுள்ளது. இந்த இடங்களில், பின்வரும் ஆலயங்களை தரிசனம் செய்யலாம்.
* அயோத்தி – ராம ஜென்மபூமி கோவில், ஹனுமான் கர்ஹி, சரயு காட், நந்திகிராம், பாரத் ஹனுமான் கோவில் மற்றும் பாரத் குண்ட்
* ஜனக்பூர் (நேபாளம்) – ராம்ஜானகி கோவில்
* சீதாமர்ஹி- ஜானகி கோவில்
* பக்சர்- ராம் ரேகா காட், ராமேஷ்வர்நாத் கோவில்
* வாரணாசி – துளசி மானஸ் கோவில், சங்கட் மோகன் கோவில், விஸ்வநாதர் கோவில் மற்றும் கங்கா ஆரத்தி
* பிரயாக்ராஜ்- சீதாமர்ஹி, பரத்வாஜ் ஆசிரமம், கங்கா-யமுனா சங்கம் மற்றும் ஹனுமான் கோவில்
* ஷ்ரிங்வெர்பூர்- சிருங்கி ரிஷி ஆசிரமம், சாந்தா தேவி கோவில் , ராம்சௌரா
* சித்ரகூட் – குப்த கோதாவரி, ராம்காட், சதி அனுசுயா கோவில்
* நாசிக்-திரிம்பகேஷ்வர் சிவன் கோவில், பஞ்சவடி, சீதா குஃபா, காலாராம் கோவில்
* ஹம்பி – அஞ்சனாத்ரி மலை, விருபாக்ஷா கோவில் மற்றும் விட்டல் கோவில்
* ராமேஸ்வரம் – ராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி
* காஞ்சிபுரம் – விஷ்ணு காஞ்சி, சிவன் காஞ்சி மற்றும் காமாட்சி கோவில்
* பத்ராசலம் – ஸ்ரீ சீதாராம ஸ்வாமி கோவில், அஞ்சனி ஸ்வாமி கோவில்
ரயிலின் வழித்தடம், நேரம், முன்பதிவு டிக்கெட் விலை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. நீண்ட தூர ரயில் பயணங்களில் IRCTC வழங்கும் வசதிகள் இந்த ரயிலிலும் உள்ளன. இந்த ரயிலில் ஒரு பேண்ட்ரி கார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன மற்றும் , பயணிகளின் பாதுகாப்புக்காக காவலர்களும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.