புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியே ஆட்சி மொழி.. நிர்வாகம் ஆணை
புதுச்சேரி ஜிப்மரில் எதிர்காலத்தில் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனையில் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்து வருகிறது. பொது மக்களுக்கும் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் அறிக்கை தமிழில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகம் சார்பில் இயக்குனர் பெயர் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அலுவலகப் பணிக்கு பயன்படுத்தப்படும் மொழி குறித்தது இந்த அறிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அலுவலக மொழி 1976ம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்கள், பிரிவு ஊழியர்களுக்கான பொறுப்பு நபர்கள் ஆகியோர் இதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், ஏதேனும் உதவி தேவையெனில் இந்தி பிரிவை தொடர்புகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.