பட்டின பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி: ஆதினம் தகவல்
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை நடத்த ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என மயிலம் பொம்மபுர ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் பட்டின பிரவேச நிகழ்வுக்கு அண்மையில் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு மதுரை ஆதினம், மன்னார்குடி ஜீயர் போன்ற சமயம் சார்ந்தவர்களும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் சார்பு உடையவர்களுக்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்லக்கு தூக்குபவர்களும் பல்லக்கு தூக்குவது தங்களில் சமய உரிமை என்றும் அதனை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது என்றும் கூறியுள்ளனர். தடையை மீறி ஆதினத்திற்கு பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் குன்றக்குடி ஆதீனம், கோவை பேரூர் ஆதீனம், மயிலம் ஆதீனம் உள்ளிட்டோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். அப்போது, திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மயிலம் பொம்மபுர ஆதீனம், தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியில் அரசியல் தலையீடு தேவையில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தாக கூறினார்.
மேலும், தருமபுர ஆதீன பட்டன பிரவேச நிகழ்ச்சியை நடத்த ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, அமைச்சர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மயிலம் பொம்மபுர ஆதீனம், சர்ச்சையான கருத்துகளை ஜீயர் தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.