ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய ஹசரங்கா; அபார வெற்றி பெற்றது பெங்களூர் அணி !!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 73* ரன்களும், படித்தர் 48 ரன்களும் எடுத்தனர். அதே போல் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 33 ரன்களும், தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணி, பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய ராகுல் த்ரிபாட்டி (58), மார்க்ரம் (21) மற்றும் நிக்கோலஸ் பூரண் (19) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்ட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 19.2 ஓவரில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே போல் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் பட்டேல் மற்றும் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.