ஆசிரியை வெளியிட்ட மாணவரின் மன்னிப்பு கடிதம் இணையத்தில் வைரல்

டெல்லியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை மனு குலாட்டி. இவர் தனது மாணவர் ஒருவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த நிலையில், அந்த கடிதம் நெட்டிசன்களிடம் வைரலாகியுள்ளது.
ஆங்கில ஆசிரியையான மனு தனது மாணவர்களுக்கு மன்னிப்பு கடிதம் என்ற தலைப்பில் அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அதன்படி, மாணவர்கள் தங்கள் சொந்த கற்பனையில் யாருக்காவது மன்னிப்பு கடிதம் எழுதி அதை ஆசிரியையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அசைன்மென்டில் மனுவின் மாணவர் ஒரு எழுதியுள்ள உருக்கமான கடிதம் அவரை நெகிழச் செய்துள்ளது. இதையடுத்து அந்த கடிதத்தை ட்விட்டரில் ஆவலுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த மாணவர் தனது கடிதத்தில் ஒரு ராணுவ வீரர் தனது பணி நிமித்தம் காரணமாக தங்கையின் திருமணத்திற்கு வர இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், தனது தங்கைக்கும் தாய்க்கும் மன்னிப்பு கடிதம் எழுதவதாக கற்பனை செய்து இக்கடித்தை அவர் வரைந்துள்ளார். அதில், ‘ நமது எல்லை அபாயமான சூழலில் உள்ளது. எனவே, என்னால் திருமணத்திற்கு வர இயலவில்லை. என்னை நீ மன்னித்து விடு.
எல்லையில் நிலவும் சூழல் காரணமாக என்னால் விடுப்பு பெற முடியவில்லை. என்னால் தங்கையின் திருமணத்தை பார்க்க முடியவில்லை. நான் மீண்டும் எப்போது தங்கையைப் பார்ப்பேன் எனத் தெரியவில்லை. இப்போதைக்கு எனது கடமை தான் எனக்கு முக்கியம். நான் வராததற்கு தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள்’ என அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதை பகிர்ந்த ஆசிரியை மனு, தனது மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அன்மையில், தனது பள்ளி மாணவி ஒருவருக்கு இவர் ஹரியான்வி பாடலுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.