கேரளாவில் பரவிவரும் தக்காளி வைரஸ் – குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகுங்கள்

கொரோனா உச்சத்தில் இருந்த கேரளாவில் தற்போது தக்காளி வைரஸ் பரவி வரும் நிலையில், கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 85க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது மாதிரியான அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தக்காளி வைரசுக்கு அதிகளவில் பாதிக்கப்படுவதால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தக்காளி வைரஸ் புதியது இல்லை என்றும், சிக்கன்குனியா போன்றதுதான் என்றும் தெரிவித்துள்ளார். நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களால் உருவாகும் இந்த வைரஸை தடுக்க, தமிழ்நாட்டில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி, பார்ப்பதற்கு தக்காளி போல் இருப்பதால், இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டு இருப்பதாக கூறும் ராதாகிருஷ்ணன், தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.