கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் புதுத்தொழில் அவசியம்: ராம்நாத் கோவிந்த்

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் புதுத்தொழில்கள் தொடங்குவது நாட்டின் வளா்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்கு(ஐஐஎம்-நாகபுரி) நிரந்தர வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவா் மேலும் கூறியதாவத:

கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கான இடங்கள் மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணா்ந்து மெருகூட்டும் இடமாகவும் உள்ளது.

நமது பாடத்திட்டமானது, நோக்கம், இலட்சியம் ஆகியவற்றை நமக்குள் சுயபரிசோதனை செய்து, அதன் மூலம் நமது கனவுகளை நனவாக்குவதற்கான சந்தா்ப்பத்தை வழங்குவதாக இருக்க வேண்டும்.

புத்தாக்கம், புதுத்தொழில்முயற்சியை ஊக்குவிக்கும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புதுமை மற்றும் தொழில்முனைவு இரண்டும் தொழில்நுட்பத்தின் மூலம் நம் வாழ்க்கையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், பலருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.

உணவு விநியோகம் முதல் இணையவழியில் பொருள்கள் வாங்குவது வரை அனைத்து விதமான சேவைகளும் செல்லிடப்பேசி செயலி வழியாகவும், புதுத் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் நமக்கு கிடைக்கின்றன.

இதுபோன்று கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் பல வாய்ப்புகள் உள்ளன. அந்தத் துறைகளில் புதுத் தொழில் தொடங்குவது நாட்டின் வளா்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் வருவாயும் கிடைக்கும்.

நாகபுரி ஐஐஎம் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவா்களாக மாறும் வகையில் அவா்களை ஊக்குவிக்க வேண்டும். ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் கிளை வளாகங்களை புணே, ஹைதராபாத், சிங்கப்பூா் ஆகிய நகரங்களில் நிறுவதற்கு மேற்கொள்லப்பட்டுள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுகள் என்றாா் அவா்.

முன்னதாக, தில்லியில் இருந்து விமானத்தில் நாகபுரி விமான நிலையம் வந்தடைந்த ராம்நாந்த கோவிந்தை மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்டோா் வரேற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.