உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள கொடூரத்தை நேரடியாக கண்டேன்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் மற்றும் ரஷியப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று பார்வையிட்டார்.
இர்பின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குஷின் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் படங்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நகரத்திற்குச் செய்த அனைத்து பயங்கரங்களையும் தனது கண்களால் பார்க்க கனடா பிரதமர் இர்பினுக்கு வந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜி7 நாடுகள் கூட்டத்திற்குப் பிறகு உக்ரைன் தலைவருடனான செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறியதாவது:-
“கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புதின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது. ரஷியாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன்.
நமது வெற்றிக்குப் பின், உக்ரேனிய நகரங்களின் புனரமைப்புக்கு எங்கள் நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். கனடா கீவில் இன்று மீண்டும் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது” என்று கூறினார்.
புச்சாவில் நடந்ததைப் போல, இர்பின் நகரில் அப்பாவி குடிமக்களுக்கு எதிராக ரஷ்யப் படைகள் அட்டூழியங்கள் செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.
நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதாக ரஷ்யப் படைகள் குற்றம் சாட்டப்பட்ட இர்பினுக்கு சென்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் பார்வையிட்டார். அதே போல, பல மேற்கத்திய அரசியல் தலைவர்கள் சமீபத்தில் இர்பினுக்கு பயணம் செய்துள்ளனர்.