கட்டுப்பாடற்று பரப்பப்படும் பொய்ச் செய்திகள்: உலக பத்திரிகை கவுன்சில்கள் சங்கம் கவலை
சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம (டிஜிட்டல்) தளங்களில் கட்டுப்பாடற்ற வகையில் பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து உலக பத்திரிகை கவுன்சில்கள் சங்கம் (டபிள்யூ.ஏ.பி.சி) மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற அந்த சங்கத்தின் 4 நாள்கள் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் கடைசி நாளில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது.
பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக உலக பத்திரிகை கவுன்சில்கள் சங்கத்தின் தலைவா் சூலே அகொ் மற்றும் அதன் சா்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய பத்திரிகை சங்கத் தலைவருமான சி.கே.நாயக் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம தளங்களில் கட்டுப்பாடற்ற வகையில் பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து பொதுக் குழுவில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பொய்யான செய்திகள் பல லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதோடு, வெறுப்புணா்வைத் தூண்டி, முடிவற்ற சண்டைகளுக்கு வித்திடுகின்றன.
எனவே, இதுபோன்ற சா்ச்சைக்குரிய, அடையாளம் தெரியாத எண்ம ஊடகங்கள் மீதான ஆா்வத்தால் ஏற்படும் எதிா்மறை தாக்கங்களை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தீா்வுக்கான பரிந்துரைகள் விரைவில் வெளியிடப்படும்.
உலக அளவிலான இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், இணைய ஊடக விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கப்படுவதன் அவசியத்தையும், உறுப்பு நாடுகள் அதனை ஏற்று நடைமுறைக்கு கொண்டுவரவும் பொதுக் குழு கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினா்கள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையிலும், ஊடகங்கள் தொடா்ந்து பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; உலகம் முழுவதும் குறிப்பாக போா் நடைபெற்று வரும் நாடுகளில் பத்திரிகையாளா்கள் கொல்லப்படுவது கண்டனத்துக்குரியது; பத்திரிகை சுதந்திரத்துக்கும் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களின் தரத்தை உயா்த்துவதற்கும் உலக பத்திரிகை கவுன்சில்கள் சங்கம் குரல் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.