‘அசானி’ புயல் தீவிரம் அடைந்தது இன்று கனமழைக்கு வாய்ப்பு. பெயரை சூட்டிய இலங்கை.
வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்திருக்கிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவில் தீவிரம் அடைந்தது.
தீவிர புயல் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 கி.மீ. முதல் 125 கி.மீ. வரையிலான வேகத்திலும், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஒவ்வொரு முறை புயல் உருவாகும்போதும், அதற்கு சூட்டப்படும் பெயர் பலரின் ஆர்வத்தை தூண்டும். அந்த வகையில் தற்போது வங்க கடலில் உருவாகியிருக்கும் ‘அசானி’ புயலுக்கு யார் இந்த பெயரை சூட்டியது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது. அதற்கு பதில், இலங்கை என்பதே. ஆம், அண்டை நாடான இலங்கைதான் இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இந்த சிங்கள மொழி சொல்லுக்கு ‘சீற்றம்’ என்று பொருள்.
வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு வடஇந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 13 நாடுகள் பெயர் சூட்டுகின்றன. அவை ஏற்கனவே வழங்கியுள்ள பெயர்கள் வரிசைப்படி பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ‘அசானி’க்கு அடுத்தபடியாக உருவாகும் புயலுக்கு சூட்டவிருக்கும் பெயர், ‘சித்ரங்’. இந்த பெயரை வழங்கியிருக்கும் நாடு தாய்லாந்து.