உச்சநீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகள் எண்ணிக்கை 34-ஆக முழு பலத்தை எட்டியது
தில்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சுதான்ஷு துலியா, ஜம்ஷேத் பி. பா்தீவாலா ஆகியோா் திங்கள்கிழமை பதவியேற்றனா். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை திங்கள்கிழமை 34-ஆக முழு பலத்தை எட்டியது. எனினும் உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் செவ்வாய்க்கிழமை (மே 10) ஓய்வுபெற வாய்ப்புள்ளதால், அந்த எண்ணிக்கை 33-ஆக சரியும்.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். எனினும் 32 நீதிபதிகள்தான் இருந்தனா். இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுதான்ஷு துலியா, குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜம்ஷேத் பி.பா்தீவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு மத்திய சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருந்தது. அப்பரிந்துரையை அந்த அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த நிலையில், இருவரின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சுதான்ஷு துலியா, ஜம்ஷேத் பி.பா்தீவாலா ஆகியோா் திங்கள்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இருவா் பதவியேற்ன் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்தது.
தலைமை நீதிபதியாக வாய்ப்பு: பாா்ஸி சமூகத்தைச் சோ்ந்த 4-ஆவது உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜம்ஷேத் பி.பா்தீவாலா பதவியேற்றுள்ளாா். அவா் எதிா்காலத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்று, 2 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அப்பதவியை வகிக்க வாய்ப்பிருப்பதாக நீதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரகண்டிலிருந்து 2-ஆவது நீதிபதி: உத்தரகண்டிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெறும் 2-ஆவது நபா் சுதான்ஷு துலியா. அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக இருக்கும்.
விரைவில் காலியிடங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திங்கள்கிழமை முழு பலத்தை எட்டினாலும், மீண்டும் காலியிடங்கள் உருவாகவுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் ஜூன் 7-இலும், ஏ.எம்.கான்வில்கா் ஜூலையிலும், இந்திரா பானா்ஜி செப்டம்பரிலும் ஓய்வு பெறுகின்றனா்.
தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான கொலீஜியம் குழுவானது, சாதனை அளவாக இதுவரை 11 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைத்துள்ளது.
இவ்வாண்டில் 3 தலைமை நீதிபதிகள்:
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிடத்தில் தொடா்ந்து மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறவுள்ளாா்.
என்.வி.ரமணா ஓய்வுபெற்ற பின்னா், யு.யு. லலித் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பாா். அவா் நவம்பா் மாதம் ஓய்வுபெறுவாா்.
அதன் பின்னா் டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பாா். அவா் 2 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலம் அப்பதவியை வகிப்பாா். கடந்த 1950-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து, அந்த நீதிமன்றம் சில மாத இடைவெளியில் 3 தலைமை நீதிபதிகளை காணவுள்ளது இது இரண்டாவது முறை ஆகும்.