கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடன்… விடிய விடிய காவல் காத்த கிராம மக்கள் – நாகை அருகே பரபரப்பு

நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர், தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரை டவுசர் குண்டு ஆசாமி ஒருவர் சென்றுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர்.
இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட திருட்டு ஆசாமி அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்க தொடங்கியுள்ளார். சுமார் 300 மீட்டர் தூரம் ஆங்காங்கே விழுந்து விழுந்து ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அங்குள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவனிடம் சரமாரியாக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் அரை டவுசர் போட்ட கருப்பு குண்டன், சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை தான் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், கிராம மக்களே திருடனை விடிய விடிய காவல் காத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
நாகை அருகே திருடச் சென்ற இடத்தில் கையும் களவுமாக அரை டவுசர் திருட்டு ஆசாமி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.