பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை அறைக்குள் அடைத்து வைத்த கொடுமை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கட்டணம் கட்டாத மாணவர்களை அறை ஒன்றில் அடைத்து வைத்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள இஸ்ஸச்நகர் என்ற இடத்தில் ஹார்ட்மன் என்ற பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் 35 குழந்தைகளை பள்ளிக்கூட கட்டணம் செலுத்தாததால் அவர்களை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.
பின்னர் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் பள்ளிக்கு வந்த போதுதான் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் அறைக்குள் பூட்டி வைத்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியுடன் ஆத்திரமடைந்த பெற்றோர் காவலர்களை அழைத்து குழந்தைகளை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் குழந்தைகள் பயந்து போய் கடுமையாக அழுதுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து பள்ளி மீது புகார் அளிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்குர் சக்சேனா கூறுகையில், இந்த சம்பவத்தை அறிந்ததும் அதிர்ச்சிக்குள் ஆனேன். இது தொடர்பாக விசாரித்து உரிய வகையில் புகார் அளிக்கவுள்ளேன் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வரும் நிலையில், எப்ஐஆர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. மாணவர்களை அடைத்து வைத்த அறையில் மின்விசிறி இல்லை எனவும், குழந்தைகளுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத் தரப்பில் இதுவரை ஒரு பதிலும் தரப்படவில்லை.