மஹிந்தவை உடன் கைதுசெய்க! – பொலிஸ்மா அதிபரிடம் சட்டத்தரணிகள் கோரிக்கை.
கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் மேற்கொள்வதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை உடனடியாகக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமர் உட்பட அரசும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி தன்னெழுச்சியாகக் காலிமுகத்திடலிலும் அலரி மாளிகையின் முன்னும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர்கள் மீது நேற்றுத் தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் ஏற்பாடு செய்து இவர்களைக் கொழும்புக்கு அழைத்து வந்தவர்கள் ஆகியோருடன் நேற்று பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த மஹிந்த ராஜபக்சவையும் கைதுசெய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.