பஞ்சிகாவத்தையில் 5 பொலிஸ் வாகனங்கள் அடித்து உடைத்து எரிப்பு!
கொழும்பிலுள்ள நகர்ப்பகுதியான பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தில் மாத்திரம் 5 பொலிஸ் வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து உடைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகையின் முன்பாகவும், காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர்கள் மீது இரும்புக் கம்பிகளுடன் நேற்றுப் பகல் வந்த ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்துடன் குறித்த இரு இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆகிய கூடாரங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கித் தீயிட்டு எரித்திருந்தனர்.
மேற்படி இரு தாக்குதல் சம்பவங்களும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அரச வன்முறையாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு 10, பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தின் வீதியில் நேற்று மாலை இறங்கிய அப்பகுதி மக்கள், நள்ளிரவு வரை மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பஞ்சிகாவத்தை சுற்றுவட்டப் பகுதிகளால் வந்த பொலிஸாரின் 5 வாகனங்களை இடைமறித்த மக்கள், அதிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கினர்.
மக்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் தாம் வந்த வாகனங்களைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். எனினும், மக்களின் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்து கிடந்தார். அவரை வீதியால் வந்த தனியார் வாகனம் ஒன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மக்கள் அனுப்பிவைத்தனர்.
இதேவேளை, மக்களின் பிடிக்குள் சிக்கிய 5 பொலிஸ் வாகனங்களும் (ஜீப் 01, ஹயஸ் 01, பஸ் 01, கார் 02) வீதியில் வைத்து அடித்து உடைக்கப்பட்டன. அதன்பின்னர் அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
நேற்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையிலான 6 மணிநேரத்துக்குள் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றன. நள்ளிரவு 12 மணிவரை மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.