ஈகுவடார் சிறையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.
ஈகுவடார் தலைநகர் குயிட்டோவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள சாண்டோ டொமிங்கோ நகரில் இருக்கும் சிறையில் நேற்று முன்தினம் இருதரப்பு கைதிகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.
இருதரப்பையும் சேர்ந்த கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மேலும் அவர்கள் துப்பாக்கி, கையெறி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் ஒட்டுமொத்த சிறையும் கலவர பூமியாக மாறியது. கைதிகள் மிகவும் ஆக்ரோஷத்துடன் மோதலில் ஈடுபட்டதால் அங்கிருந்த சிறை காவலர்களால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. எனவே கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நீண்டபோராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கலவரத்தில் 44 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே கலவரத்தை பயன்படுத்தி 220 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி 112 கைதிகளை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள 108 கைதிகளை ஹெலிகாப்டர் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.