ஓடி ஒளியும் ராஜபக்சே… கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இடதுசாரி கட்சியினர்

இலங்கையில் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தினமும் ஆளும் அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டகாரர்களுக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் ராஜபக்ஷே குடும்பத்தினரையும் அவர்கள் உடமைகளையும் தாக்கி வருகின்றனர். வீடுகளை தீவைத்து எரித்தனர்.இந்நிலையில் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன் , ஹெலகாப்டர் மூலம் திரிகோணமலைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக கோவையில் இடதுசாரி கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன்படி, ராஜபக்சே சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுவதை கொண்டாடும் விதமாக கோவையில் சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய அவர்கள் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.1.5 லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இன்று உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளதும், சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுவதையும் கொண்டாடும் விதமாகவே பட்டாசுகளை வெடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச-வின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை தூண்டிவிடப்பட்டதாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வன்முறையைத் தூண்டிவிட்ட அனைவரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.அந்த நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். வன்முறையை தடுக்கத் தவறியது தொடர்பாக இலங்கை காவல் துறை உள்ளிட்டோருக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.