விடுவிக்கப்படுவாரா பேரறிவாளன்? உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை
பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது:
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கில் தகுதி அடிப்படையில் வாதிடத் தயாராக இல்லாததால், நீதிமன்றம் அவரை விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்க பரிசீலிக்க நேரிடும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவா் முடிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று காலை பட்டியலிடப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பை நீதிபதிகள் தெரிவிக்க வாய்ப்புள்ளது.