‘சூம்’ வழியாக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம்! – சபாநாயகர் அறிவிப்பு.
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை ‘சூம்; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இவ்வாறு இணையவழியாக இந்தக் கலந்துரையாடலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜிநாமா செய்துள்ள நிலையில், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் அமைதியின்மைக்குத் தீர்வு காணப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை மீண்டும் விசேடமாக நாடாளுமன்றத்தைக் கூட்டாதிருக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், எம்.ஏ.சுமந்திரன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், இணைய வழி ஊடாகக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.