கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ பணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கோவில் குளம் ஆகிய புராதன கோவில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.
இந்த கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட பணிகள் நடந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா அரங்கம் உள்ளிட்ட புராதன கட்டிடங்கள் பாதிக்காத வகையில் சுரங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நூறு ஆண்டுகளுக்கு மேலான கோவில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4 வது வழித்தடத்தில் உள்ள கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோவில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட ஏழு கோவில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் எனவும், இந்த கோவில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.