இராணுவ ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! – கமால் கூறுகின்றார்.
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான சாத்தியம் கிடையாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொதுச் சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் என்னால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், முப்படையினருக்கு உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். எனக்கு அதிகாரம் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால்தான் நான் அவ்வாறு உத்தரவிட்டேன்.
கொழும்பில் கூட்டத்துக்கு வந்தவர்கள் கோல்பேஸ் செல்வார்கள் எனப் புலனாய்வாளர்களுக்குத் தகவல் கிடைக்கவில்லை. அது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டத்தை நாளை நீக்கமுடியும் என நம்புகின்றோம்.
இலங்கையில் இராணுவ ஆட்சி இடம்பெற்றதில்லை. ஒருமுறை அதற்கான முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. எனவே, இராணுவ ஆட்சி இங்கு இடம்பெறாது. அதற்கான சாத்தியமும் இல்லை” – என்றார்.