கரையைக் கடந்தது அசானி புயல்… தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடந்தது. எனினும், மீண்டும் காற்றழுத் தாழ்வு நிலையாக வலுவிழந்து ஏனாம் -காகிநாடா பகுதியில் வங்காள விரிகுடாவை அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநில கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்திலும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஒடிஷாவில் – மல்கங்கிரி, கோராபுட், ராய்கட், கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மற்றும் மேற்கு வங்க அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. புயலின் வீரியம் குறைந்து மேற்கு நோக்கி நகரும் என கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை ஆந்திர அரசு திறந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வட மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டம் கோடியக்கரையில் கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. கடல் அரிப்பின் வேகத்தால் கடலில் உள்ள சங்குகள் கரையோரத்தில் ஒதுங்கின. வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மழை மற்றும் வானிலை இடையூறுகளால் இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.