கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலை தொடர்பாக அரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!
கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலைகளில் சங்கத் தலைவரின் கையொப்பம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் தமிழகம் முழுவதும் கடந்த 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி காலம் 2023 வரை உள்ள நிலையில் நிர்வாக குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டுறவு சங்க மசோதாவிற்கு தமிழக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலைகளில் சங்கத் தலைவரின் கையொப்பம் தனியாகவோ அல்லது சங்கச் செயலாளருடன் கூட்டாகவோ இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
உள்நோக்கத்துடனும், சட்டவிரோதமாகவும் மற்றும் கூட்டுறவு தன்னாட்சிக்கு விதிகளுக்கு எதிரான இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி. ஆர் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தன்னிச்சையாக வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி தமிழக அரசின் கூட்டுறவு சங்கம் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.