டான் விமர்சனம்.
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சிவகார்த்திகேயன் மகனாக பிறக்கிறார். தான் படும் கஷ்டம் தன் மகனுக்கு வர கூடாது என்று நினைத்து, சிவகார்த்திகேயனை படித்து பெரிய ஆளாக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், சிவகார்த்திகேயனோ படிக்காமல் பெரிய ஆளாக மாற நினைக்கிறார்.
அதன்பின் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார்.
இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நடனம், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக நடனம் மற்றும் பள்ளி பருவ காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். தற்போது படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாக ஜொலித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இறுதியில் கண்கலங்க வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. பல இடங்களில் சாதாரணமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.